இமயம் முதல் இலங்கை வரை பலபல திருப்பதிகளை பாடியவராயினும், அருணகிரி வள்ளலின் வாழ்வில் இரு பெரும் திருப்பங்கள் நிகழ்ந்த திருவருணையும், வயலூரும் அதிகச் சிறப்புடைத்து. அருணையம்பதியின் கோபுரத்தின் மேலேறி வீழத்துணிந்தவரை தாங்கிய இளையனார், " நீ வீழ வந்தவனல்லன். மானிடரை வீழ்ச்சியினின்றும் ஏற்ற வந்தவன்." என்றருளினார். அங்கேயே அவருக்கு உபதேஸம் செய்வித்து, நயன, திருவடி தீக்ஷையோடு கூட, வள்ளிநாயகியின் திருக்கரத்தால் ஸ்பர்ச தீக்ஷையும் செய்யப்பணித்தார். அங்கிருந்து எழுந்தருளிய அருணகிரி வள்ளலார், சில தலங்களை வரிசை க்ரமத்தில் பாடி வந்தாலும், வயலூர் வந்து சேர்ந்த போது தான் நம் ஸ்வாமிக்கு "பாடும் பணியே பணியாய்" இருக்கும்படி குமரன் பணித்தான். இனி அவர் நாவினின்றும் வரும் எல்லாம் குமரன் புகழன்றி மற்றில்லை என்ற நிலையில், இந்த தலத்தில் தான் அவர் பாடல்களுக்கு "திருப்புகழ்" என்ற பெயரும் சூட்டினார். இத்தலைப்பிட்டு, இப்படியொரு ஆணையை வழங்கியவர், தந்தை வலத்தால் அருட்கை கனி கொண்ட பொய்யாப்பிள்ளையாரெனும் ஆனைமுகனே. அந்நன்றி மறவாமல் நம் ஸ்வாமி, அந்த விநாயகப்பெருமான் புகழை அழகாய் பாடுகிறார்.
****************************************************************
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய பெருமாளே.
********************************************************************
இப்பாட்டில் உள்ள சுவையை ஈண்டு சிந்திப்போம்.
பக்கரை, விசித்திர மணி, பொற்(ன்) கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும்:
குஹச்சின்னங்களில் ப்ரதானமானதும், முருகனின் திருவுருவாகவே பார்க்கப்படுவதும் அவன் தன் மாமயூரமே. அதனால் அதை முதலில் பாடுகிறார். அந்த மயூரமானது அவன் அமர ம்ருதுவானதாக இருந்தாலும், அதன் தீரம் கோபாவேசங்கொண்ட குதிரையினோடொக்கும். அதால் புரவிக்கு செய்யும் அலங்காரங்களெல்லாம் இதற்கும் செய்யப்பட்டிருக்கும். அதன்படியே, முருகன் அதன் மீதமரும்போது அவன் தாமரை மலர்கள் நோவாதபடிக்கு இருத்திக்கொள்ள அங்கவடிகள்(பக்கரை) போடப்பட்டிருக்கும். அக்குதிரை வேகங்கொண்டு ஓடும்போது காற்றில் ஒலியெழுப்பி அதன் வரவை உணர்த்த மணிகள்(விசித்திர மணி) தொங்கவிடப்பட்டிருக்கும். மேலும் அதன் முதுகில் பொன்னாலான சேணமும்(பொற்கலணை) கட்டப்பட்டிருக்கும். இப்படி அங்கவடி, மணி, சேணம் எல்லாம் அமைந்த, போர்க்குதிரை போலே விளங்கும் மயில். இதில் அங்கவடி - நமக்கு எப்போதும் பற்றாகும் அவன் திருவடி நிலையென்றும், மணிகள் - ஓங்காரமென்றும், முன்னதை பற்றி, பின்னதை த்யானிக்க, நம் ஹ்ருதயத்தில் பொன்னாலான சேணத்தில் குமரன் அமரந்தருளுவான் என்பது சூக்ஷ்மார்த்தம். இப்படி அவன் அடியார்களெல்லாம் அவன் எறியருளும் மயூரமேயாவர்.
நீபப் பக்குவ மலர்த் தொடையும்:
நீபமாவது கடம்பம். குறிஞ்சிக் குமரனுக்கு அதிப்ரீதியான புஷ்பங்களை புஷ்பிக்கும் வ்ருக்ஷம். அதுவும் முறையாக மலர்ந்ததாக வேண்டும். அப்படி மலர்ந்த கடம்பந்தார்களை மாலையாகத் தொடுத்து அணிவிப்பர். நேரடியாக முருகனை குறிக்கும் வஸ்துவாகவே கடம்பமாலை கொள்ளப்படுகிறது.
அக் குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும்:
முருகனின் திருக்கைவேலே(அருள் கை வடி வேலும்) அவனுடைய ஞானத்திருவுரு. உமையம்மையிடம் பெற்ற, அந்தகாரம் போக்கவல்ல அவ்வருள் வடிவேலால் முருகன் முதலில் ஸம்ஹரித்தது(பட்டு ஒழிய), மாயா வேஷத்தோடு மலையாக(அக் குவடு) வளர்ந்திருந்த க்ரெளஞ்சனை. அஹங்காரத்தால் கல்லென வளர்ந்திருந்தவனை ஞானவேல் பொடிபொடியாய் வீழ்த்தியது (ஒழிய பட்டு உருவ விட்டு).
திக்கு அது மதிக்க வரு குக்குடமும்:
அடுத்து குமரனின் சேவற்கொடி. உயர்ந்ததோர் கம்பத்தில் அரசாள்பவனின் சின்னம் பொறித்த கொடியை நடுவது, அது எல்லா திக்கிலும் உள்ளோர் கண்டு பணியும்படி இருக்கவே. அது தென்படும் விஸ்தீரணம் அளவும் அக்கொடிக்கு உரிமையுடையோன் ராஜாங்கமே. குமரனின் சேவற்கொடி(மதிக்க வரு குக்குடமும்) திக்கெட்டும் தெரியும்படி பிரகாசித்து (திக்கு அது மதிக்க ), அதை காணும் அடியாரெல்லாம் அவன் ஆளுகைக்கு உட்பட்டவராவதை உணர்த்தி நிற்கும்.
ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்:
நட்டக்கொடியினாலே அவனது உடமையென்றானபின் ரக்ஷித்தல் அவன் கடன் ஆகிவிடுமே. (“தன் கடன் அடியேனையும் தாங்குதல்" என்பது அருளாளர் வாக்கு.) அதனால் அடியார்கள் கலங்காமல் பற்றியிருக்க(ரட்சை தரும்) குழந்தை வேலவனின் சின்னஞ்சிறு சேவடிகளும் (சிற்று அடியும்), வீரம் திரண்டு நிற்கும் பன்னிரு தோள்களும்(முற்றிய பன்னிரு தோளும்) அடுத்து பாடும் பொருளானது. துன்பத்தீயில் உழல்வாருக்கு பற்றினால் ஹிதமளிக்கம் திருவடிகள், மிருதுவான திருக்கமலபாதங்களாகவும், அத்துன்பத்தின்றும் காத்துக்கொடுக்க திணவு கொண்ட தோள்களாகவும் பாடியுள்ளார். திருவடிகள் அடியார்கள் கொஞ்சும் படியும், திருத்தோள்கள் க்ஷத்ருக்களை விஞ்சும்படியும் உள்ளது குஹஸ்வரூபத்தின் மேன்மை.
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே:
அருணையம்பதியில் அருளியதெலாமிருக்க, ஜெயப்பதியான வயலூருக்கு அழைத்தருளி (செய்ப்பதியும் வைத்து) அங்குள்ள பொய்யாபிள்ளையார் மூலம், "அருணகிரிநாத! இன்று தொடங்கி அன்பில் தமிழ் கலந்து இளையனாரின் மேன்மையை திருப்புகழாக்கி பாடுக" (உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என) என்று பணித்ததை சொல்லுகிறார். இஃதொரு அருளும் இருந்ததே. இத்தால் மேற்சொன்னவற்றோடு வயலூரின் பெருமையையும் பாடும்படி பணித்தார் என்றறிய வேண்டும். இப்படி எனக்கு அருளிய வரத்தை என்றும் மறவேன் (எனக்கு அருள்கை மறவேனே) என்று பாடுகிறார்.
மேலே மயில், கடம்ப மாலை, வடிவேல், குக்குடத்வஜம், திருவடி, தோள்கள், வயலூர் என்ற வரிசையில் பாடியுள்ளார் நம் ஸ்வாமி. மயிலானது அருள்வழியிலேகும் அடியார் நிலையை குறிக்கும் என்பதை முன்னமே பார்த்தோம். அப்படியுள்ள அடியார் கூட்டத்தில் இழிவதால், கந்தனின் கடம்பமாகிற மாலையின் பக்திமணம் பெருகி, அந்த பக்தியின் போக்கால் வடிவேலான ஞானம் நம்மை துளைத்து, அஹங்காரமொழியச்செய்து, நாம் நமதில்லை என்னும் பக்குவம் பெற்று, அவனுடமையென அறிவித்து, அதையுணர்த்த குக்குடத்வஜத்தையேற்றி, இனி நம்மை தங்குதல் அவன் கடன் என்று உறுதிபட, அவன் திருவடிகளில் விஸ்ராந்தியாக விழுந்து கிடக்க, நம்மை அவன் பன்னிரு தோள்கள் காக்கும் என்றுணர வைக்கிறார். வாஸ்தவத்தில், திருப்புகழின் எந்த பாடலையெடுத்தாலும் அருணகிரியாரின் அருளுக்கும் அத்தால் விளைந்த புலமைக்கும் இது ஒன்றே சான்று எனக்கொள்ளலாம். இந்த மேம்பட்ட ஞானநிலை இவருக்கு வாய்த்தது வயலூரிலே. ஆகையால் அதன் பெருமையையும் ஏனைய திருப்புகழ்களில் நம் ஸ்வாமி பாடுவதை பார்க்கலாம்.
இப்படியொரு விசேஷ கடாக்ஷத்தை தன்மேலே பொழிந்த மூத்தபிள்ளையாருக்கு அவருகக்கும்படி பலவகை அன்ன பக்ஷணாதிகளை ஸமர்ப்பித்து மகிழ்கிறார் மேலே.
இக்கு, அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்புடன், நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், வண்டு எச்சில்:
கரும்பு(இக்கு), அவரைக்கொத்து, பழுத்த கனிகள், சர்க்கரை, நல்ல பதத்தில் வடித்த பருப்பு, புத்தருக்கு நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன் (வண்டு எச்சில்).
பயறு, அப்ப வகை, பச்சரிசி பிட்டு, வெளரிப்பழம், இடி, பல்வகை தனி மூலம், மிக்க அடிசில், கடலை, பட்சணம்
எனக் கொள்:
பயற்றுவகைகள், பலவித அப்பங்கள், பச்சரிசியை இடித்து வேகவைத்த பிட்டு, வெள்ளரிப்பழம், நெல்லையும், பயற்றையும் இடித்த மாவு ( இடி), நிலத்தடியில் விளையும் பல்வேறு கிழங்குகள்(பல்வகை தனி மூலம்), பலவகையான அன்னங்கள் (மிக்க அடிசில்), கடலை இவற்றையெல்லாம் பக்ஷிக்கும்படி அடியார் படைக்க, அவற்றை ஏற்றருளும்,
ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி வெற்ப:
ஏற்படும் இடர்களை எளிதில் களைய அருளும் ஒப்பற்ற ஒரு தலைவன்(ஒரு விக்கிந சமர்த்தன்) என்னும்படி விளங்கும், அருட்கடலே, அருள் மலையே (அருள் ஆழி வெற்ப).
குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே:
வளைந்த செஞ்சடையும், கையில் பினாகமென்னும் வில்லையும் தாங்கியிருப்பவரான (உன் தந்தையான) பரமேஸ்வரனின் அருட்கொடையே (குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள்), கையில் திறனுடைய ஒற்றை கொம்பை பிடித்திருக்கும் பெருமானே (வித்தக மருப்பு உடைய பெருமாளே) என்கிறார். இதில் செஞ்சடை வள்ளல் தந்த கொடையாக விக்கினங்களை அறுக்கும் விநாயகனையும், அவர் தந்த கொடையாக ஐந்தாம் வேதமான பாரதத்தையும் கொள்ளலாம். அந்த ஒடிந்த கொம்பின் வித்தகம், வ்யாஸபகவான் சொல்ல பாரதத்தையே ஆக்கித் தந்தது. அதேபோல் என்றும் அழிவில்லா திருப்புகழையும் இந்த ஒற்றைக்கொம்பே பாடும்படி ஆணையிட்டு ஆக்கியும் தந்தது. (ஆனைமுகன் அருளோடே திருப்புகழ் அச்சேறிய வரலாறு மிகவும் சுவையானது. பின்னொரு நாள் அதைப்பற்றி எழுதுகிறேன்)
திருப்புகழ் பாடுதலாகிய ஒப்பற்ற வரம் நம் ஸ்வாமிக்கு வாய்க்கப்பெற்ற வயலூர் திருத்தலம் மேன்மை தங்கியது. அங்கு துவங்கிய நம் ஸ்வாமியின் பக்திபயணம் அவர் காலம் கடந்தும் அவரடியார்கள் மூலம் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. காலமுள்ளவரை அதை கந்தனே காத்தும் தருவான்.
யெமைபணி விதிக்குஞ் சாமி சரவண
தகப்பன் சாமி யெனவரு பெருமாளே!!
புவிதனி லெனக்குண் டாகு பணிவிடை
கணக்குண் டாதல் திருவுள மறியாதோ?
" பாடும் பணியே பணியாய் அருள்வாய் "
படங்கள்: இணையத்திலிருந்து
Comments