top of page

Blog 2

தமிழின் பக்தி இலக்கிய புதையற்குவியலில் விலை மதிக்கவியலாதொரு வைரம், அருணகிரிப் பெருமான் திருவருணை கோபுரத்து இளையனார் அருளால் பாடிய திருப்புகழ் பாடல்கள். மொழி பயிலும் சிறுபிள்ளைகளுக்கு தமிழ் எழுத்துக்களின் தன்மை, உச்சரிப்பில் நேர்த்தி இவற்றை ஏற்படுத்தித்தர திருப்புகழ் பயிற்றுவிப்பது நன்மை பயக்கும் என்பது பெரியோர் கருத்து. இக்கருத்து முற்றிலும் உண்மையே. அருணகிரி வள்ளல் பாடிய சில சந்தங்களும், அவர் கையாண்ட சில சொற்ப்ரயோகங்களும் அநேகமாக வேறு யாருமே கையாண்டதில்லை எனலாம்.


அறுமுகப்பெருமானின் திருவருளன்றி இப்படியொரு தமிழ் மழை அவர் நாவினின்றும் வந்திருக்க வேறு காரணம் இருக்கவும் முடியுமா?


பெரும்பாலும் தன் பாடல்களில் வேல்விழி மாதர் மேல் காமம் கொண்டு, கொடிய செயல்களில் இழிபடாதே என்றே பாடும் அருணகிரியார், சில பாடல்களில் நாயகி பாவமும் மேற்கொண்டுள்ளார். ஆண்கள் பெண்பாவனையில் பாடுவதே சற்று கடினம். ஆழ்வார்களுக்கும் ஆண்டாளுக்குமான வாசியாக இதை வைணவ உரையாசிரியர்கள் பல இடங்களில் சிறப்புற பேசியிருப்பர். அப்படியிருக்க, பெண் பித்து வேண்டாமென்று மீண்டும் மீண்டும் அறிவுறுத்தும் அருணகிரியார், தன்னையே நாயகியாக பாவித்து, காதலில் சிக்குண்ட வேதனையை பாடினாரென்றால், அவர் காதல் கொண்ட தலைவனின் தன்மை அப்படி. முருகு என்றால் அழகுதானே. என்றும் குன்றா இளைமையோடு, பார்க்கும் பெண்களையெல்லாம் பீடித்து பித்து கொள்ளச்செய்வதை முருகு என்றழைப்பதுதானே தமிழர் வழக்கம். அந்த நித்யயௌவனனின் வசீகரம் அருணகிரியாரையும் விடவில்லை போலும்.


திருவண்ணாமலையில் இருக்கும், வடவீதி சுப்ரஹ்மண்யர் என்ற முருகவேளை கீழ்கண்ட பாடலால் துதிக்கிறார்.


இமராஜனி லாவதெ றிக்குங் கனலாலே

     இளவாடையு மூருமொ றுக்கும் படியாலே

சமராகிய மாரனெ டுக்குங் கணையாலே

     தனிமானுயிர் சோரும தற்கொன் றருள்வாயே

குமராமுரு காசடி லத்தன் குருநாதா

     குறமாமக ளாசைத ணிக்குந் திருமார்பா

அமராவதி வாழ்வம ரர்க்கன் றருள்வோனே

     அருணாபுரி வீதியி னிற்கும் பெருமாளே !!


இமராஜன் நிலா அது தெறிக்கும் கனலாலே:


குமரனை பிரிந்து வாடுகிறாள் தலைமகள். மாலையும் வந்தது. ஹிமம் எனப்படும் குளிர்ச்சிக்கு தலைவனாக இருக்கும் சந்திரன் வானிலேறிவிட்டான். வந்தவன், தனது கிரணங்களை பூமியின் மீது படரவிட, மற்றையோருக்கெல்லாம் குளிர்ச்சியை வழங்கிய அக்கிரணங்கள், நம் தலைமைகளுக்கு கனல் கீற்றுக்கள் தெறிக்கவிட்டது போலவிருந்தது.


இளவாடையும் ஊரும் ஒறுக்கும் படியாலே:


வாடைக்காற்று மெதுவாக வீசும். காதல் நோயால் துன்புறுவோருக்கு அதனினும் கொடுமை வேறில்லை. அந்த காற்று ஊசி போல் தைக்க, அதோடு சேர்ந்து ஊர் மக்களும் தலைவியின் நிலை கண்டு வீணாகப்பழித்து பேசி வருகின்றனர். ஒறுக்குதல் என்றால் தண்டித்தல் என்றும் பொருள். மற்றவருக்கு அருளாக இருக்கும் காற்று, தலைவிக்கு மட்டும் வலியை தந்து ஊர் மக்களின் பழிசொல்லும் அதோடு சேர தன்னை தண்டிப்பதாக எண்ணுகிறாள்.


சமர் ஆகிய மாரன் எடுக்கும் கணையாலே:


சமர் என்றால் போர். இஃதோர் போர் நடத்துவது போலுள்ளது தலைவிக்கு. போரை முன்னின்று நடத்துவது மாரனான மன்மதன். வீரப்போர் போலில்லாமல் இந்த காமப்போரில் புஷ்ப பாணங்கள் எய்தப்படுகிறது. அபூங்கணைகள் தலைவியின் தன்மையை நிலைகுலைய செய்கிறது. (முன்பொருமுறை மன்மதன் எய்த புஷ்ப பாணத்தின் விளைவு தானே குமரன் சம்பவித்ததும்.)


தனி மான் உயிர் சோரும் அதற்கு ஒன்று அருள்வாயே:


பிரிவாற்றாமை தாளாமல் மான் போன்றும் துள்ளி குதித்தபடி அலையும் தன் மனதை சோர்ந்து போய் அடங்கும்படி செய்யாமல் அவளை குதூகலத்துடன் இருக்கும்படி செய்வாய் என்று வேண்டுகிறாள்.


குமரா முருகா சடில அத்தன் குருநாதா:


குன்றா இளமையுடையவன் குமரன். தன்னை கண்டு உள்ளம் தொலைத்தவர்களை பீடித்து அவர்களுக்கு காதல் நோய் உண்டாக்குபவன் முருகன். இது ஏதோ விளையாட்டுப்பிள்ளையோ என்றால், இவன் தான் சடையுடைய தன் அத்தனுக்கு குருவாய் அமர்ந்து வேதாந்த விழுப்பொருளை உபதேசித்தவன்.


குறமாமகள் ஆசை தணிக்கும் திருமார்பா:


பரமேஸ்வரனுக்கு உபதேசித்த ஞானமுடையவன் என்றவர், அவன் ஆசை காதலியின் நோய் தீர்த்தவன் என்றும் சமாதானம் சொல்லுகிறார். அவனை பிரிந்து வாடிய வள்ளிநாயகியின் உள்ளப்பிணி தீர, அவளை தன் மார்போடு வாரி அணைத்து, தன் மார்பின் திறத்தால் அவள் உள்ளக்கொதிப்பை குளிர்வித்தவன் என்றபடி.


அமராவதி வாழ்வு அமரர்கு அன்று அருள்வோனே:


சூரனுக்கு அஞ்சி அவன் அரண்மனையில் சேவகம் செய்து துன்புற்ற தேவர்களுக்கு, அவர் தாம் இழந்த அமராவதி வாழ்வை மீண்டும் அருளியவன். விதிவசத்தால் நிலைகுலைந்து இழிவுபடுவோருக்கு அந்த நிலை மாறி, முன்போல் மேன்மை பொருந்தியதொரு ஸ்தானத்தை வழங்குபவன் முருகன். ஆனபடியால், அவனை பிரிந்து வாடும் துன்பம் தீர்த்து, தன் உடைமையாக்கி உயர்த்துவான் என்று பொருள்.


அருணாபுரி வீதியில் நிற்கும் பெருமாளே:


அமராவதியோ என்று கலங்கும்படி செல்வம் மலிந்த திருவருணையம்பதியின் வீதியில் கோயில் கொண்டு நிற்கும் பெருமானே.

இப்படி சுட்டெரிக்கும் நிலவு, வெட்டும் வாடைக்காற்று, உறுத்தும் ஊர் மக்கள் பேச்சு, வலிக்கும் பூங்கணைகள் இதெல்லாம் ஏற்படுத்திய ரணத்தால் துடித்து, வள்ளி நாயகியை மார்போடு அனைத்து ஆற்றியது போல,தன்னையும் தாங்கி அருளவேண்டும் என்கிறார்.


ஸ்கந்தன் ஞான ஸ்வரூபன். அவன் அழகை கண்டு மோகித்தல் என்றால், அது ஞானத்தை கண்டு மோகித்தலாகும். அந்த ஞானம் பெற வேண்டிதானே இவர் இவ்வளவு பாடினார். அந்த ஞானம் பெற்று,அஞ்ஞானம் அகன்ற பின், உடற்பசிக்கு உணவு தேடவேண்டிய அவஸ்யமில்லையே.


படங்கள்: இணையத்திலிருந்து



Recent Posts

See All

Comments


bottom of page