அருணகிரிப்பெருமானின் தமிழில், ஆழ்வார் நாயன்மார்களின் கருத்தியல் தாக்கம் சற்றே அதிகமாக இருக்கும். ரசனையோடு கையாண்டிருப்பார். சிவகதைகளைப்போலே ராமாயண மஹாபாரத கதைகள் பலவற்றை மேற்கோள் காட்டி அவற்றை குஹப்பெருமானோடு தொடர்புபடுத்தும் பாங்கு தன்னடையே தனியழகு.
ஒரு பத்தியில் 3-4 கதைகள் புணையும் பாங்கும், அதற்கு சந்தத்திற்கு தகுந்த ஷப்தாப்ரயோகமும் இவர் தம் தனித்தன்மை.
அவர்தாம் குஹப்பெருமானின் அருளடைந்தவாறே முந்துறமுன்னம் பாடியதாக ஆன்றோர் கருதும் "முத்தைத்தரு பத்தி.." என்னும் திருப்புகழ் பாமரரிடமும் வெகு ப்ரபலம். அதில் 3 & 4 பத்திகளில் திருமால் தன் திறம் சொல்லும் பாங்கில், 4 வரிகளில் 4 கதைகளை கோர்கிறார்.
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ......
இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ......
ஒருநாளே;
"பத்துதலை கணைதொடு தத்த.." என்பதால் இராமன் இராவணன் மேல் சரமாரி பெய்து தலை அற்று வீழ்த்தியதும்;
"ஒற்றைகிரி மத்தை பொரு.." என்பதால் வடவரையை மத்தாக்கி திருமால் ஆயிரம் தோளால் அலைகடல் கடைந்ததுவும்;
"வட்டத்திகிரியில் பட்டப்பகல் இரவாக.." என்பதால் பாரதப்பெரும் போரில் திருமால் கூராழி கொண்டு இரவியின் கதிர்கள் நுழைதறியாச்செய்து பகலை இரவாக்கியதும்;
"பத்தற்கு இரதத்தை கடவிய.." என்பதால் தன் மேன்மையெல்லாம் அற்றுப்போக எளிமையின் எல்லையாக இந்திரன் சிறுவன் தேர் முன் நின்று, போர்களத்தில் சாரத்யம் செய்ததையும் பாடுகிறார்.
இப்படி வீர்ய, சக்தி, தேஜஸ், சௌலப்யாதிகளின் எல்லை கண்ட பச்சைமாமலையிறையான திருமாலே மெச்சும் படியாக தம் பக்தர்களுக்காக இவற்றை குஹப்பெருமான் வெளியிட்டார் என்கிறார்.
பாட்டிற்கு பத்து முறை திருமாலின் குணப்பூர்த்தியை கொண்டாடும் ஆழ்வார் தம் வாக்கின் தாக்கத்தோடு தம் சகுணோபாசனையின் வெளிப்பாடாக முருகனின் இந்த குணங்களை கொண்டாடி மகிழும் அருணகிரியாரின் சொற்திறம் ஓர் அத்புதம் தான்.
Comments